கோத்தா பாரு, மே 22- ஸ்பா எனப்படும் மருத்துவ நீருற்றுக் குளியல்
மையத்தின் உரிமையாளர் மீது எரிதிராவகம் என நம்பப்படும் திரவம்
ஊற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில்
பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாச்சோக், பெரிஸ் குபோர் பெசாரில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த
இச்சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய அந்தப் பெண் கோல கிராயில்
உள்ள ரப்பர் தொழிற்சாலை எதிரே நேற்று மாலை 4.00 மணியளவில்
கைது செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
முகமது யூசுப் மாமாட் கூறினார்.
ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வரும் அப்பெண்
முந்தையக் குற்றப்பதிவு எதனையும் கொண்டிருக்கவில்லை என்று அவர்
சொன்னார்.
அந்த பெண்ணிடமிருந்து பெரேடுவா மைவி கார், கைபேசி மற்றும் வாகன
கட்டுப்பாட்டு கருவி ஆகியவைற்றை தாங்கள் பறிமுதல் செய்ததாக இன்று
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 326வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், விசாரணைக்காக
தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக அவர் இன்று
பாச்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றார் அவர்.
கடுமையான காயங்களை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக காவல்
துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஸ்பா உரிமையாளரான பெண்மணி ஒருவர் மீது கடந்த சனிக்கிழமை
அடையாளம் தெரியாத நபர் எரிதிராவகம் என நம்பப்படும் திரவத்தை
ஊற்றி காயப்படுத்தினார். இச்சம்பவம் பாச்சோக், தாவாங், பெரிஸ் குபோர்
பெசாரில் உள்ள பல்பொருள் விற்பனை மையம் எதிரே நிகழ்ந்தது.


