NATIONAL

கெஅடிலான் தேர்தல் உள்கட்சி விவகாரம் - அமைச்சரவை மாற்றத்திற்கு  எந்த தொடர்பும் இல்லை - பிரதமர்

22 மே 2025, 3:16 AM
கெஅடிலான் தேர்தல் உள்கட்சி விவகாரம் - அமைச்சரவை மாற்றத்திற்கு  எந்த தொடர்பும் இல்லை - பிரதமர்

புத்ராஜெயா, மே 22 - கெஅடிலான் ராக்யாட் கட்சியின் 2025  தேர்தல் என்பது கட்சிக்குள் நடக்கும் போட்டியாகும். அமைச்சரவையை மறுசீரமைப்பது தொடர்பான பிரச்சனைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.

பதவிகளுக்கு நடைபெறும்  கட்சி நிலையிலானப்  போட்டி, கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான  அனைத்து திறன்களையும் வலுப்படுத்தும் மற்றும் கிரகித்துக் கொள்ளும் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்று கெஅடிலான் தலைவருமான அவர் சொன்னார்.

கெஅடிலான் தேர்தல் எங்கள் சொந்த நண்பர்கள், நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். எனவே, அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை.

மற்றவர்களின் விருப்பங்களை (ராஜினாமா செய்வது அல்லது காலியிடங்களை நிரப்புவது) நாம் தடுக்க முடியாது. அவர் (பதவியை) காலி செய்ய விரும்புகிறார் அல்லது நிரப்ப விரும்புகிறார் எற்றால் அது சாதாரணமானது.

என்னைக் கேட்டால் அமைச்சரவையில் எந்த மாற்றங்களையும் செய்யும் திட்டம் என்னிடம் இல்லை  என்று நேற்று இரவு ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடனான  விளக்கமளிப்பு நிகழ்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த மாதம் நடைபெறும் கெஅடிலான் தேர்தலில் தோல்வியடைந்தால் அமைச்சரவையில் தனது பதவியை கைவிடத் தயாராக இருக்கும் கெஅடிலான் துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லியின் நோக்கம் குறித்த கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

கெஅடிலான் கடசித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு ரபிஸிக்கும் நூருல் இஸ்ஸா அன்வாருக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ஜோகூர் பாருவில் உள்ள பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நாளை தொடங்கும் தேசிய மாநாட்டில்  2025-2028 தவணைக்கான  மத்திய தலைமைத்துவ மன்றம்,  இளைஞர் பிரிவான அங்காத்தான் மூடா கெஅடிலான்  மற்றும் மகளிர் பிரிவுகளுக்கு  தேர்தல் நடைபெறுகிறது.

உள் கட்சியின்  போட்டியில் காணப்படும்  'அனல்' நேர்மறையாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையின் எந்தக் கூறுகளையும் அது பிரதிபலிக்கவில்லை என்றும் அன்வார் கூறினார்.

இங்கு நடப்பது என்னவென்றால்  நிலையான அரசியல் நிலைக்காகப் போட்டி நிலவுகிறது. உறுதியற்ற போக்கு  போட்டி இல்லாத  சர்வாதிகாரியாக மாறுகிறது. நாம் அதை நேர்மறையாகப் பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, 83 உள்ளூர் மற்றும் அனைத்துலக  ஊடக பிரதிநிதிகள் கலந்து கொண்ட விளக்கமளிப்பு நிகழ்வில்  அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டார். வார இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாடு உட்பட தற்போதைய பிரச்சனைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அன்வார் பதிலளித்தார்.

மலேசிய தேசிய செய்தி நிறுவனத்தின் (பெர்னாமா) தலைமைச் செயல் அதிகாரி டத்தின் படுகா நூர்-உல் அபிடா கமாலுடின், தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ், பொருளாதார செய்திச் சேவையின் நிர்வாக ஆசிரியர் சரஸ்வதி முனியப்பன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.