கோலாலம்பூர், மே 22 - கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (கே.எல்.சி.சி.)
நடைபெறவிருக்கும் 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு
ஆசியான் உறுப்பு நாடுகளின் உயர் அதிகாரிகள் (எஸ்.ஒ.எம்.) மலேசியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இன்று மலேசியா வரும் உயர்நிலை அதிகாரிகளில் ஆசியான் அதிகாரிகள்,
ஆசியானுக்கான தீமோர் லெஸ்தே அரச தந்திரி, வளைகுடா நாடுகள்
ஒத்துழைப்பு மன்றத்தின் எஸ்.ஒ.எம். தலைவர்கள், ஆசியானுக்கான
நிரந்தரப் பிரதிநிதி, அரசியல் பாதுகாப்பு சமூகத்திற்கான ஆசியான் துணைத்
தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரும் அடங்குவர்.
இரண்டாவது ஆசியான்- வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சநிலை
மாநாடு மற்றும் முதலாவது ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றம்
மற்றும் சீனா உச்சநிலை மாநாடு ஆகியவையும் நடைபெறுவதால் இந்த
முறை நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாடு தனித்துவம்
கொண்டதாக விளங்குகிறது.
அதே சமயம், முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களுடன் ஆசியான்
பங்காளித்துவம் துரித வளர்ச்சி காண்பதையும் இந்த நிகழ்வு
பிரதிபலிக்கிறது.
ஆசியான் உயர் அதிகாரிகள் நிலையிலான முதலாவது கூட்டம் எதிர்வரும்
23ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசியான் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் மே 25ஆம் தேதியும்
ஆசியான் தலைவர்கள் நிலையிலானக் கூட்டம் மே 26ஆம் தேதியும்
வளைகுட ஒத்துழைப்பு மன்றம் மற்றும் சீனாவுடனான உச்சநிலைக்
கூட்டம் மே 27ஆம் தேதியும் நடைபெறும்.
இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பேராளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கே.எல்.சி.சி. வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


