கோலாலம்பூர், மே 22 - மலேசியாவின் 2025 ஆம் ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தை முன்னிட்டு நாட்டின் அதிகாரப்பூர்வ வாகனமாகப் புரோட்டான் இ.மாஸ் 7 (e.MAS 7) தேர்ந்தெடுக்கப்பட்டது.
நாட்டின் மின்சார வாகன (இ.வி.) துறையின் மேம்பாட்டிற்கும் அதனை பிரபலப்படுத்துவதற்கும் இது உந்து சக்தியாக விளங்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாடு விரைவில் 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தும் நிலையில் இது மிகவும் பொருத்தமானதாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.
இந்தத் தேர்வு உள்நாட்டுத் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மட்டுமின்றி எதிர்கால வாகனத் துறையை வழிநடத்துவதில் உள்ளூர் மக்களுக்கு உள்ள ஆற்றல் மீதான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என அவர் கூறினார்.
இந்த முயற்சியானது மலேசியா மடாணியின் கட்டமைப்பின் கீழ் நாட்டின் நிலைத்தன்மை பணி நிரல் மற்றும் பசுமை எரிசக்தி மாற்றத்திற்கு ஏற்ப, வரும் ஆண்டுகளில் நிகர சுழியம் கரியமிலவாயு உமிழ்வை இலக்காகக் கொண்ட மலேசியாவின் உறுதிப்பாட்டிற்கும் ஏற்ப உள்ளது
உள்நாட்டு கண்டுபிடிப்புகளை தொடர்ந்து ஆதரிப்போம். நிலையான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்ப எதிர்காலத்தை நோக்கி உழைப்போம் என்று அவர் முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
அந்தப் பதிவில் அவர், தனது அலுவலக வளாகத்தைச் சுற்றி முதல் புரோட்டான் மின்சார வாகனத்தை சோதனை அடிப்படையில் ஓட்டிச் சென்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.


