(ஆர்.ராஜா)
ஷா ஆலம், மே 21 - தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தின்
மேன்மையை பறைசாற்றும் நிகழ்வுகளுடன் தமிழ் வண்ண விழா எனும்
மாபெரும் நிகழ்வு இங்குள்ள டேவான் எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டரில் எதிர்வரும்
ஜூன் முதல் தேதி வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
காலை 8.00 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரை நடைபெறும் இந்த
நிகழ்வில் முத்தாய்ப்பு அங்கமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்
மகா கவி பாரதியார் போல் உடையணிந்து அவரது ‘அச்சமிலை‘ என்ற
பாடலை பாடி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிப்பர்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மொழி மற்றும் தமிழர்களின்
பாரம்பரியம் மற்றும் கலை,கலாசாரத்தை பாதுகாத்து மேலோங்கச்
செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்டோர் பங்கேற்பர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அதன் ஏற்பாட்டுக்
குழுத் தலைவரும் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினருமான நட்டின்ரன்
ராஜ் பாஸ்கரன் கூறினார்.
கல்வியமைச்சு மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.)
ஆதரவுடன் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 13வது மண்டலம்,
எஸ்.ஆர்.எஃப்.ஏ கலை மற்றும் கலாசார அமைப்பு, ஸ்ரீ ராதா கிருஷ்ணன்
இசை மற்றும் கலைப் பயிலகம் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்வுக்கு
கூட்டாக ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக ஒற்றுமைத் துறை துணையமைச்சர்
சரஸ்வதி கந்தசாமி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பராய்டு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ்,
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ், ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ பவுஸி மெகாட் யாத்திம் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் ஒன்று சேர்ந்த மகா கவி பாரதியாரின் அச்சமில்லை என்ற
பாடலை ஒன்று சேர்ந்து பாடுவது இந்நிகழ்வின் சிறப்பு அங்கமாகும்.
அதிகப் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கவிதை வாசிப்புக்காக மலேசிய
சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கில் இந்த முயற்சி
முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் ஒத்துழைப்பின் காரணமாக
இந்நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்
பங்கேற்பதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த தமிழ் வண்ண விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட கடைகள்
மற்றும் காட்சிக் கூடங்களையும் ஏற்பாடு செய்துள்ளோம். அவற்றில்
இந்தியர்களின் பண்டையக் கால பொருள் கண்காட்சி, ரங்கோலி
கோலப்போட்டி, தோரணம் பின்னும் போட்டி, பரதநாட்டியப் போட்டி,
பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி, மண்பாண்டங்கள் செய்யும்
பயிற்சிப் பட்டறை, உள்ளிட்ட பல சுவாரஸ்ய அங்கங்களுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ இராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை பயிலகம், எஸ்.ஆர்.எஃப்.ஏ.
கலை மற்றும் கலாசார அமைப்பின் நிறுவனர் நளினி இராதாகிருஷ்ணன்
அவர்களின் முழு ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த தமிழ் வண்ண
விழாவின் வெற்றியை உறுதி செய்வதில் 200க்கும் மேற்பட்ட
இளைஞர்கள் தன்னார்வலர்களாக முழு பங்களிப்பை வழங்குவர் என்றார்
அவர்.


