ஷா ஆலம், மே 21- கோம்பாக், கம்போங் மிலாயு வீரா டாமாயில் ஏற்பட்ட
தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வாடகை வீடுகளைப் பெறுவதற்கு
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகம் உதவி புரியும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில்
கணிசமான நிதியுதவியையும் தாங்கள் வழங்குவதாக தொகுதி
நாடாளுமன்ற உறுப்பின டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஆறு குடும்பங்கள் வசித்து
வரும் மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டன. அந்த வீடுகளில் வசித்து வந்த
மொத்தம் 19 பேர் கம்போங் மிலாயு வீரா டாமாய் சமூக மண்டபத்தில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் விடுபடுவதற்கான
மனோதிடத்தையும் வலுவையும் அளிக்க நான் இறைவனை
பிரார்த்திக்கிறேன். பாதிக்கபட்ட குடும்பங்களின் சுமையைக் குறைப்பதற்கு
நாடாளுமன்றத் தொகுதி அலுவலகம் தொடர்ந்து முயற்சிகளை
மேற்கொண்டு வரும் என அவர் தெரிவித்தார்.
அந்த தீவிபத்தில் சில வீடுகள் சேதமடைந்ததாக சிலாங்கூர் மாநில
தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர்
அகமது முக்லிஸ் மொக்தார் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்கு கம்போங்
மிலாயு வீரா டாமாய் சமூக மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையம்
திறக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவியாக சுமார் 3,000 வெள்ளி
மதிப்புள்ள போர்வை, தலையணை, உலர் உணவு வகைகள் உள்ளிட்ட
பொருள்களை எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார்
அறக்கட்டளை வழங்கியது.


