கோலாலம்பூர், மே 21 - கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் நடைபெறும் 46-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு இரயில் சேவையின் இயக்க நேரம் நீட்டிக்கப்படும் என ரெபிட் கேஎல் அறிவித்துள்ளது.
மே 23 தொடங்கி 27-ஆம் தேதி வரை காலை மணி 6.30 முதல் காலை மணி 10 வரையிலும், மாலை மணி 4.30 முதல் இரவு மணி 8 வரையிலும் அதன் சேவை ஒரு மணிநேரத்திற்கு நீட்டிக்கப்படும் என பெரசரானா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அனைத்துலக பேராளர்கள் உட்பட பயணிகள் அனைவரின் சீரான போக்குவரத்தை கருத்தில் கொண்டு முதன்மையான நிலையங்களில் கூடுதலாக 400 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
கூடுதலாக இவ்வார இறுதி நாட்களில் அதாவது மே 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் இரயில் பயணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மோனோரயிலும் ஒவ்வோர் எட்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.
இதனிடையே, பல சாலைகள் அமலாக்கத் தரப்பினரால் படிப்படியாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, பல பேருந்து வழிகள் மற்றும் On-Demand சேவைகள் தாமதங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
--பெர்னாமா


