ஷா ஆலம், மே 21: இந்திய சமூதாயத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு எப்பொழுதும் கல்விக்கு மிக சிறந்த ஆதரவை வழங்கி வருகிறது. எஸ்.பி.எம் மாணவர்கள் சிறந்த தேர்வு முடிவுகளைப் பதிவு செய்ய சிலாங்கூர் இலவச டியூஷன் திட்டம் (PTRS) போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது. தேவையுள்ள மாணவர்கள் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் சிறந்த எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை பெற்ற பல மாணவர்களில் இரண்டு இந்திய மாணவிகளை மீடியா சிலாங்கூர் பேட்டி கண்டது.
கிள்ளான் ராஜா மஹாடி பள்ளியை சேர்ந்த அபினேஸ்வதி மற்றும் பண்டார் பூச்சோங் ஜெயா B’இல் கல்வி கற்ற சஞ்சனா போன்றவர்களின் வெற்றி பிற மாணவர்களுக்கு வழிகாட்டல்களாக அமைய வேண்டும்.
இந்த பேட்டியில் அந்த மாணவர்களின் வழிகாட்டல்கள் மற்றும் அவர்களின் எதிர்கால இலட்சியங்கள் குறித்தும் வினவப்பட்டது,
அவர்களின் சிறந்த தேர்ச்சி அர்ப்பணிப்புக்கான வெற்றி என்றார்கள். மாணவர்கள் கல்வி கற்கும் காலங்களில் அவர்களின் சுய ஆசைகளை அர்ப்பணிக்க வேண்டும். தாய் தந்தை மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் அப்பிள்ளையின் கல்விக்காக குடும்ப சுகங்களை அர்ப்பணித்து கல்விக்கு உதவுகிறார்கள்.
ஆசிரியர்கள், நண்பர்களும் கூட நமது கல்விக்கு பல வகையில் அர்ப்பணிப்புகளை செய்கிறார்கள். அந்த அர்ப்பணிப்புகளுக்கு மாணவர்களான நாம் கைமாறு செய்ய வேண்டும் என்றால் அது சிறந்த அடைவு நிலையாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே, எங்களை ஊக்குவித்து உதவிய அனைவருக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம் என்றனர் அம்மாணவிகள். சிறந்த தேர்வு முடிவுகளை பெற உதவிய அனைவருக்கும் தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
சரியான நேர வகிப்பு, கடந்த கால தேர்வுத்தாள்களை மீள்பார்வை செய்தல், கடினமான பாடங்களை தனக்கு தானே சொல்லிக் கொடுக்கும் உத்தி முறை ஆகியவை எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற பெறும் பங்காற்றியதாக சஞ்சனாவும் அபினேஸ்வதியும் விளக்கினர்.
தமிழ் பற்று அதிகம் உள்ள காரணத்தால் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை தேர்ந்தெடுத்ததாக அவ்விருவரும் தெரிவித்தனர்.
கல்வி மேல் உள்ள அதிக நாட்டம் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தல் ஆகியவை தற்போது மாணவர்களுக்கு சவாலாக இருக்கும் மன அழுத்தப் பிரச்சனையை கையாள தனக்கு உதவியதாக சஞ்சனா தெரிவித்தார், அதே வேளையில் தான் நிகழ்காலத்தில் போடும் உழைப்பு எதிர்காலத்தில் தரும் பலனை தினந்தோறும் நினைத்து பார்க்கும் தருணம் மன சோர்வு நீங்கி புதிய தெம்பு கிடைத்ததாக மாணவி அபினேஸ்வதியும் பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடகங்களும் தாங்கள் எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற உதவியதாக இரு மாணவிகளும் தெரிவித்தனர். கல்வி சம்பந்தப்பட்ட செயலிகள், காணொளிகள், கூகுள், Chat GPT ஆகியவை தங்களுக்கு குறிப்பாக அறிவியல் பாடங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற துணைப்புரிந்தன என்றனர்.
தாங்கள் இரு ஆண்டுகள் அல்லும் பகலும் பாராமல் படித்ததற்கு இந்த தேர்ச்சி முடிவு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இரு மாணவிகளும் தெரிவித்தனர்.
பெற்றோர்களின் தியாகத்தை நினைத்து பார்த்து கல்வி கற்கும் வாய்ப்பை வருங்கால எஸ்.பி.எம் மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாணவி சஞ்சனா கேட்டு கொண்டார். அதுமட்டுமில்லாமல், நம்முடைய எதிர்காலத்தை சிறந்ததாக்க கல்வியே முக்கிய மந்திரம் என்றார் அபினேஸ்வதி.
எதிர்காலத்தில் சமூகத்திற்கு சேவை செய்யும் வகையில் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளதாக சஞ்சனா தெரிவித்த வேளையில், அறிவியல் சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட ஆசை உள்ளதாக அபினேஸ்வதி கூறினார்.
தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள 10ஏ பெற்ற மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் வாய்ப்பு மிகவும் பாராட்டுக்குரிய திட்டம் என இரு மாணவிகளும் தெரிவித்தனர். இத்திட்டம் அரசாங்கம் மாணவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமாக பார்க்க வேண்டும் மற்றும் இதன் மூலம் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய அதிக வாய்ப்புண்டு என்றனர். அதற்காக அவர்கள் அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இறுதியாக, தற்போது மலேசியாவில் பின்தங்கி இருக்கும் நம்முடைய சமுதாயம் முன்னோக்கி பீடுநடை போட தமிழ் பற்று, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவை இளையோரிடையே சிறு வயது முதலே விதைக்க வேண்டும் என்றார் மாணவி அபினேஸ்வதி.
(ஷாலினி இராஜமோகன்)


