ஷா ஆலம், மே 21- அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் 2025 சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம் (பி.டி.ஆர்.எஸ்.) மூலம் சுமார் 160,000 மாணவர்கள் இலவச டியூஷன் வகுப்புகளில் பங்கேற்று பயனடைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பி.டி.ஆர்.எஸ். 2025 திட்டம் நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களை குறிப்பாக கல்வியில் சராசரி அல்லது பலவீனமான செயல்திறன் கொண்டவர்கள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மறுசீரமைப்பு வகுப்புகளில் பயில்வோரை இலக்காகக் கொண்டுள்ளது என்று எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளையின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
இந்த திட்டத்திற்கு 1.1 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு சிலாங்கூர் முழுவதும் உள்ள சுமார் 932 பள்ளிகளுக்கு 2025 பி.டி.ஆர்.எஸ். பாடத் தொகுப்புகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என அவர் சொன்னார்.
அவர்கள் அனைவருக்கும் அடுத்த வாரம் பாடத் தொகுப்புகள் வழங்கப்படும். பி.டி.ஆர்.எஸ். நேரடி பயிற்சி வகுப்புகளைப் பொறுத்தவரை, சுமார் 10,000 ஐந்தாம் படிவ மாணவர்கள் அதில் பங்கேற்பார்கள் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
கடந்தாண்டு சிலாங்கூரில் எஸ்.பி.எம். தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஏ கிரேடு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பி.டி.ஆர்.எஸ். திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கியது கண்டறியப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கில மொழி, கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் கூடுதல் கணிதம் ஆகிய பாடங்களுக்கு டியூஷன்
வகுப்புகளை பி.டி.ஆர்.எஸ். வழங்குகிறது. சராசரி அல்லது பலவீனமான கல்வி செயல்திறன் கொண்ட குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.


