ஈப்போ, மே 21 - சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வாகனமோட்டி ஒருவர் தனது கார் மீது யானைகள் நடத்திய திடீத் தாக்குதலால் பெரும் பதற்றத்திற்குள்ளானார்.
இச்சம்பவம் கிரிக்-ஜெலியை இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் 11வது கிலோமீட்டரில் நேற்றிரவு 8.15 மணிக்கு நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது ஓட்டுநரிடமிருந்து இரவு 11.36 மணிக்கு தமது துறைக்கு புகார் கிடைத்ததாகக் கிரிக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜூல்கிஃப்லி மாமுட் தெரிவித்தார்.
ஜெலியில் இருந்து கிரிக் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த ஓட்டுநர், யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்து செல்வதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி விளக்குகளை அணைத்தது சம்பவம் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.
இருப்பினும், பின்னால் வந்த வாகனத்திலிருந்து ஹாரன் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து திடீரென்று மூன்று யானைகள் அவரது காரை நெருங்கின என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு காரிலிருந்து இறங்கிய ஓட்டுநர், யானைகள் சென்ற பிறகு இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்ததாக ஜூல்கிஃப்லி கூறினார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் காரின் முன்புறம், பின்புறம், வலது மற்றும் இடது புறங்களில் சேதம் ஏற்பட்டதாகவும் எனினும், ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, யானைகள் கூட்டத்தால் தாக்கப்பட்டதால் சேதமடைந்ததாக நம்பப்படும் காரைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


