கோலாலம்பூர், மே 21 - பூச்சோங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியில் உள்ள பராமரிப்பாளர் வீட்டிலிருந்து தவறி விழுந்து ஏழு வயது சிறுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தனது துறைக்கு மதியம் 12.30 மணிக்கு புகார் கிடைத்தாக சுபாங் ஜெயா மாவட்ட துணை போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஃபைருஸ் ஜாபர் கூறினார்.
அச்சிறுமி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியின் தரையில் கிடப்பது கண்டறியப்பட்ட வேளையில் அவர் இறந்து விட்டது மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அச்சிறுமி விழுவதற்கு முன்பு அறையின் ஜன்னலில் ஏறியதாக நம்பப்படுகிறது. அந்த ஜன்னலில் பாதுகாப்பு கம்பி பொருத்தப்படவில்லை என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.
இந்த சம்பவத்தில் இதுவரை எந்த குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணைக்கு உதவுவதற்காக பராமரிப்பாளரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் தாய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு குழந்தையை கவனித்துக் கொண்டிருந்த வேளையில் சிறுமியின் தந்தை வேலைக்கு சென்றிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(a)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


