குவா மூசாங், மே 21- குவா மூசாங்- கோல கிராய் சாலையின் 27வது கிலோ மீட்டரில் குவா செஜூக் அருகே சாலையின் கரைகளில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக அந்த வழித்தடத்தின் இரு திசைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நேற்றிரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் தொடங்கி பெய்த கனமழையால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாகக் கூறிய அவர், எனினும் இதனால் உயிரிழப்புகள் அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
மேல் நடவடிக்கைக்காக இந்த மண் சரிவு சம்பவம் குறித்து பிரதான மத்திய சுற்றுச் சாலை திட்ட நிறுவனத்திடம் பொதுப்பணித் துறை புகார் அளித்துள்ளது.
சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்துப் பணியாளர்கள் மற்றும் ரோந்து வாகனப் பிரிவினர் அந்த இடத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் நேற்றிரவு பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
சீரமைப்பு பணிகள் பணிகள் முடிந்த பின்னரே சாலை மீண்டும் திறக்கப்படும்.
அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதவி விரைவாக கிடைப்பதைப் பொறுத்து சீரமைப்பு பணிகளின் அமலாக்கம் அமையும்.
இச்சாலைக்கு மாற்றாக வேறு வழிகள் எதுவும் இல்லை. ஆகவே, சாலை மீண்டும் திறக்கப்படும் வரை பொதுமக்கள் பொறுமையாக இருக்கவும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.


