ஜோகூர் பாரு, மே 21- மக்கள் நீதிக் கட்சியின் (கேஅடிலான்) மத்திய தலைமைப் பதவிக்கான தேர்தல் முடிவுகள் வரும் சனிக்கிழமை (மே 24) பிற்பகல் 2.30 மணிக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும்.
எதிர்வரும் 2025-2028 தவணைக்கான கெஅடிலான் மத்திய தலைமைத்துவ மன்றம் (எம்.பி.பி.), இளைஞர் தலைமைத்துவ மன்றம் (ஏஏ.எம்.கே.) மற்றும் மகளிர் பிரிவுத் தேர்தலுக்கான வாக்களிப்பு வரும் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் புஸியா சாலே தெரிவித்தார்.
இந்த வாக்களிப்பில் 30,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்கேற்பார்கள் என்று அவர் கூறினார்.
அவர்களில் 9,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் நேரடி வாக்களிப்பில் கலந்து கொள்வார்கள். எஞ்சியோர் இணையம் வழி வாக்களிப்பார்கள் என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களுக்கான நேரடி வாக்களிப்பு இங்குள்ள பெர்ஜெயா வாட்டர்ஃபிராண்ட் ஹோட்டல் மற்றும் டங்கா பே மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
சபா மற்றும் சரவாக்கைப் பொறுத்தவரை, பெனாம்பாங்கில் உள்ள அனைத்துலக தொழில்நுட்ப மற்றும் வணிக மையம் மற்றும் கூச்சிங்கில் உள்ள பென்வியூ மாநாட்டு மையத்தில் நடைபெறும் என புஸியா குறிப்பிட்டார்.
வேட்பாளர்கள் குறித்து பேசிய அவர், மே 8 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நீடித்த வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்குப் பிறகு போட்டியில் பங்கேற்கும் வேட்பாளர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் பெறப்படவில்லை என்றும் அதேசமயம் வேட்புமனு ஆட்சேபனை மே 12 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இரண்டு நாட்களுக்கு திறந்திருக்கும் என்றும் கூறினார்.
2025-2028 தவணைக்கான மத்திய அளவிலான பிகேஆர் தேர்தல்களில் போட்டியிட மொத்தம் 251 வேட்பாளர்கள் முன்வந்துள்ளதாக மத்திய தேர்தல் குழு (ஜேபிபி) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கடந்த மே 10ஆம் தேதி கூறியிருந்தார்.
மத்திய தலைமைத்துவ பதவிகளுக்கு 104 வேட்பு மனுக்களும் இளைஞர் பிரிவுக்கு 85 வேட்பு மனுக்களும் மகளிர் தலைமைத்துவ மன்றத்திற்கு 62 வேட்பு மனுக்களும் கிடைக்கப் பெற்றதாக அவர் கூறினார்.
கட்சியின் தலைவர் பதவிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸ்ஸா அன்வாருக்கும் பொருளாதார அமைச்சரும் நடப்புத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது.
நான்கு உதவித் தலைவர் பதவிகளுக்கு நிக் நஸ்மி நிக் அகமது (இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்), சாங் லீ காங் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர்), டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ( சிலாங்கூர் மந்திரி புசார்), டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் (நெகிரி செம்பிலான் மந்திரி புசார்) உட்பட 12 பேர் தங்களின் வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.


