கோலாலம்பூர், மே 21 - பணம் கொடுக்காவிட்டால் காதலன், காதலியின் நிர்வாண காணொளியை வெளியிடுவதாக மிரட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாங்கில் 18 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக போலீசார் மூன்று கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனர் என அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட ஆடவர் தனக்கு அறிமுகமான நபரிடமிருந்து பணம் கேட்டு மிரட்டும் வாட்ஸ்அப் செய்தியை கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி பெற்றது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் அவர் தவணை முறையில் 2,800 வெள்ளியைச் செலுத்தியுள்ளார் என முகமது அஸாம் சொன்னார்.
சந்தேக நபர்களில் ஒருவர் கூடுதலாக 1,000 வெள்ளி கேட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்று அவர் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கைதான இரு சந்தேக நபர்களுக்கும் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பது சிறுநீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாகக் கூறிய அவர், ஒரு சந்தேக நபருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட நான்கு முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளதோடு மற்றொருவருக்கு எந்தவிதமான குற்றப்பதிவும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்றார்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மிரட்டி பணம் பறித்ததற்காக தண்டனைச் சட்டப் பிரிவு 385 மற்றும் ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததற்காகப் பிரிவு 292 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


