புத்ராஜெயா, மே 21 - தற்போது 60ஆக இருக்கும் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் துறை (சட்டம் மற்றும் அமைப்பு சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சைட் முன்மொழிந்துள்ளார்.
இதனை தனது தனிப்பட்ட கருத்தாக வெளிப்படுத்திய அஸாலினா, தனி நபர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வு பெறும் போது அவர்கள் இன்னும் சுறுசுறுப்பாகவும் உற்பத்தித் திறனுடனும் பணியாளர்களுக்கு பங்களிக்கக் கூடியவர்களாகவும் இருப்பது ஒரு இழப்பாகும் என்று கூறினார்.
ஒரு வேளை அரசாங்கம் 65ஆக உயர்த்துவது குறித்து (ஓய்வு வயது) பரிசீலிக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அமைச்சரவையின் கருத்து அல்ல. நாங்கள் சந்தித்த சில அதிகாரிகள் இன்னும் இளமையாகவும் (மன ரீதியாக) சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் , அவர்கள் 60 வயதை (கட்டாய ஓய்வு) எட்டியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2024 சிறந்த சேவை விருது வழங்கும் விழா மற்றும் அமைச்சின் 'ஜசாமு டிகெனாங்' 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தாம் பயணம் மேற்கொண்ட ஆசியான் உறுப்பு நாடுகள் உட்பட பல நாடுகளில் சிலர் 70 வயது வரை தொடர்ந்து பணியாற்றுவதோடு நீதிபதிகள் 65 அல்லது 70 வயது வரை பதவியில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர் என அஸாலினா கூறினார்.
மலேசியாவில் அரசு ஊழியர்களுக்கான கட்டாயப் பணி ஓய்வு தற்போது 60 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 2012ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஓய்வூதிய வயதுச் சட்டத்தின் கீழ் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வு வயதாகவும் இது உள்ளது.


