கோலாலம்பூர், மே 20- கிள்ளான், தாமான் ஸ்ரீ காடிங்கில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் பள்ளி வேனைப் பயன்படுத்தி வரி செலுத்தப்படாத மதுபானங்களைக் கடத்த ஆடவர் ஒருவர் மேற்கொண்ட முயற்சியை கடல் போலீசார் (பி.பி.எம்.) வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
நேற்று நண்பகல் 12.00 மணியளவில் 26 வயதுடைய ஆடவர் ஒருவர் லோரி ஒன்றிலிருந்து மதுபானங்களை பள்ளி பஸ் என எழுதப்பட்ட டோயோட்டா ஹியேஸ் வேனில் ஏற்றுவதை கிள்ளான் துறைமுக கடல் நடவடிக்கை படைப்பிரிவின் உளவுப் பிரிவினர் கண்டதாக முதலாம் பிராந்திய பி.பி.எம். கட்டளை அதிகாரி ஏசிபி ருஸ்லி சே அரி கூறினார்.
அந்த வேனில் நடத்தப்பட்ட சோதனையில் வரி செலுத்தப்படாதவை என சந்தேகிக்கப்படும் பல்வேறு ரக மதுபானங்கள் அடங்கிய 56 அட்டைப் பெட்டிகள் மற்றும் 30 பெட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், 10,664 வெள்ளி மதிப்புள்ள இந்த மதுபானங்களுக்கு செலுத்த வேண்டிய வரி 36,889 வெள்ளியாகும் என்றார்.
இந்த கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு லோரி மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 117,553 வெள்ளியாகும் என்றார்.
வரி செலுத்தப்படாத மதுபானங்களை கிள்ளான் வட்டாரத்தில் விநியோகம் செய்ததை அந்த ஆடவர் ஒப்புக் கொண்டதாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபருடன் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களும் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக கோல கிள்ளான் பி.பி.எம். தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


