இஸ்தான்புல், மே 20 - இஸ்ரேலியப் படைகள் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் காஸாவில் உள்ள கட்டார் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஷேக் ஹாமாட் பின் கலிபா அல் தானி மறுவாழ்வு மற்றும் செயற்கை மாற்று உறுப்பு மருத்துவமனை சேதத்திற்குள்ளானதாக அனாடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம் கூறியது.
இந்த தாக்குதலை உடனடியாக கண்டித்த கட்டார் அரசாங்கம், பாலஸ்தீனத்தில் உள்ள பொது மக்களுக்கு எதிராக நடத்தப்படும் விரிவான தாக்குதலின் ஒரு பகுதி இதுவென வர்ணித்தது.
இஸ்ரேலின் தீவிரத் தாக்குதல் காரணமாக கடந்த சில தினங்களாக செயல்படாமல் இருந்த அந்த மருத்துவமனையை குறைந்தது ஒரு பீரங்கி குண்டு தாக்கியது.
காஸா தீபகற்பத்திலுள்ள மறுவாழ்வு மற்றும் செயற்கை மாற்று உறுப்பு மருத்துவமனை மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை நடத்திய தாக்குதலை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சு கூறியது.
பொது மக்கள், மருத்துவமனைகள், மறுகுடியேற்ற மையங்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது என அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த கொடிய போரை நிறுத்துவதற்கும் இதனால் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கும் அனைத்துலகச் சமூகம் தனது தார்மீக கடப்பாட்டையும் சட்ட நடவடிக்கைகளையும் அமல்படுத்த வேண்டும் என்றும் கட்டார் வலியுறுத்தியது.
காஸா மறுநிர்மாணிப்புக்கான கட்டார் செயல் குழுவின் மேற்பார்வையில் 40.7 கோடி டாலர் செலவிலான இந்த மருத்துவமனை கடந்த 2019ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தனது சேவையைத் தொடக்கியது.
தாங்கள் தரைவழித் தாக்குதலை மேற்கொண்ட போது அந்த மருத்துவமனையில் ஹமாஸ் தரப்பினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் சுரங்கப் பாதை கண்டு பிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவக் பேச்சாளர் ஒருவர் கடத்ந 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தார்.


