சிரம்பான், மே 20- எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதில் குறிப்பாக, 16வது பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில் கெஅடிலான் உறுப்பினர்களுக்கு இடையிலான ஒற்றுமை மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது என்று கட்சியின் உதவித் தலைவர் நுருள் இஸ்ஸா அன்வார் கூறினார்.
நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வது மட்டுமின்றி கட்சியை வலுப்படுத்துவதற்காக அடிமட்ட உறுப்பினர்களிடையே அணுக்கமான தொடர்பை ஏற்படுத்துவதிலும் அனைத்து தரப்பினரும் முழு கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.
இதுதான் நாம் கவனம் செலுத்த வேண்டிய தருணமாகும். நிலையான அரசாங்கத்தை மட்டுமின்றி மற்றவர்களை அணுகுவதற்கு முன் கட்சியின் அடிமட்ட ஒற்றுமையை வலுப்படுத்துவதை உறுதி செய்வது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.
அடுத்த 24 மாதங்களில் மாநில மற்றும் தொகுதி நிலைகளில் உள்ள அனைத்து தலைவர்களும் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் உறுதியான முன்னணியாக விளங்குவதற்கு இன்றிரவு வெளிப்படுத்தப்படும் இந்த உணர்வு அடித்தளமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கெஅடிலான் கட்சியின் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில அடிமட்டத் தொண்டர்களுடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் மகளிர்ப் பிரிவுத் தலைவியும் கல்வியமைச்சருமான ஃபாட்லினா சீடேக்கும் கலந்து கொண்டார்.
கட்சியின் ஒற்றுமையும் அடிமட்டத்தின் ஆதரவை வலுப்படுத்தும் முயற்சிகளும் நமது போராட்டத்தின் அடிப்படைக் கூறுகளாக விளங்கும் மக்களின் நலனை முன்னிறுத்தும் கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாக அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதன் அடிப்படையில் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளுடன் இணைந்து பல பயிற்சிகள் அரசியல் அகாடமியின் கீழ் நடத்தப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.


