ஈப்போ, மே 20 - மூன்று கனரக வாகனங்கள் மற்றும் பல்நோக்கு வாகனம் (எம் பி.வி.) சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் டிரெய்லர் ஓட்டுநர் ஒருவர் பலியான வேளையில் மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் (பிளஸ்) 366வது கிலோமீட்டரில் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் சிலிம் ரிவர் அருகே நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் தமது துறைக்கு இரவு 10.36 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சிலிம் ரிவர் மற்றும் பீடோர் நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் (நடவடிக்கை) சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் டிரெய்லர்
ஒன்றின் இடிபாடுகளில் 40 வயது ஆடவர் ஒருவர் சிக்கியிருப்பதைக் கண்டனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் இன்று காலை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குழாய்களை ஏற்றிச் சென்ற லோரியின் 28 வயதுடைய ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற ஐந்து டன்
லோரியின் ஓட்டுநரான 28 வயது நபருக்கு காலில் காயம் ஏற்பட்டது. டோயோட்டா அன்சர் எம்.பி.வி. வாகனத்தில் சென்ற 37 வயது ஓட்டுநரும் 32 வயது பயணியும் காயமின்றி தப்பினர் என அவர் கூறினார்.
இந்த மீட்பு நடவடிக்கை அதிகாலை 1.09 மணிக்கு நிறைவடைந்ததாக சபரோட்ஸி சொன்னார்.
இதற்கிடையில், இந்த விபத்து காரணமாக தெற்கு நோக்கி செல்லும் தடத்தில் ஆறு கிலோமீட்டர் மற்றும் மற்றும் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் நான்கு கிலோமீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பிளஸ் நிறுவனம் நேற்றிரவு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
சம்பந்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்த அனைத்து தடங்களும் தற்காலிகமாக மூடப்பட வேண்டியிருந்தது. அதிகாலை 3.47 மணிக்கு அனைத்து வழிகளும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டன.


