ஷா ஆலம், மே 20 - கோல லங்காட், கம்போங் ஒராங் அஸ்லி புசுட் பாருவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த பூர்வக்குடி குடும்பத்திற்கு மாநில அரசிடமிருந்து தொடக்க உதவி கிடைத்துள்ளது.
வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு நேற்று காலை புசுட் பாரு தோக் பாத்தின் சாரி செனினுடன் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவரான பஹாரி கோலெக்கை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்கினார்.
வீட்டிற்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. பஹாரி இந்த சோதனையை எதிர்கொள்ள வலிமையுடன் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
விரைவில் தொடர் உதவிகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறேன் எனறு அவர் சொன்னார்.
இந்தக் குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பாக காசோலை வடிவில் எனது உடனடி உதவியை வழங்குகிறேன் என்று அவர் முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இரவு 11.00 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவரின் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது.


