கோலாலம்பூர், மே 20 - சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை
உறுதி செய்வதற்காக வர்த்தக வாகனங்களுக்கு எதிரான அமலாக்க
நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று புக்கிட் அமான் சாலை
போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர்
டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.
சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) மற்றும் கணினிமய வாகன
பரிசோதனை மையம் (புஸ்பாகோம்) உள்ளிட்ட தரப்பிருடன் இணைந்து
மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கையில் கனரக
வாகனங்களின் பாதுகாப்புத் தரம் மீது கவனம் செலுத்தப்படும் என்று
சொன்னார்.
கனரக வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையை நாங்கள் முன்பிருந்தே
மேற்கொண்டு வந்துள்ளோம். ஜே.பி.ஜே.வுடன் இணைந்து
மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையில் லோரி, பேருந்து
போன்ற கனரக வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன என்று அவர்
தெரிவித்தார்.
கனரக வாகனங்கள் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி
செய்வதற்கும் சாலையை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கு
ஏதுவாக கனரக வாகனங்கள் சிறப்பான முறையிலும் முழுமையான
நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜே.பி.ஜே.வுடன் இணைந்து
இந்நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என அவர்
சொன்னார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது பணியை ஆற்றவுள்ள
போக்குவரத்து போலீசாருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மே 13ஆம் தேதி தெலுக் இந்தானில் நிகழ்ந்த டிரெய்லர் லோரி
மற்றும் மத்திய சேமப்படை வீரர்கள் பயணம் செய்த டிரக் சம்பந்தப்பட்ட
விபத்தில் ஒன்பது பேர் பலியான சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த
அவர், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடந்த வெள்ளிக்கிழமை தெலுக்
இந்தான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது என்றார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவாகவும்
முழுமையாகவும் தயார் செய்த விசாரணைக் குழுவினருக்கு தாம்
பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.


