ஷா ஆலம், மே 19 - எதிர்வரும் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் SS3 பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறும் பெட்டாலிங் மாவட்ட நிலையிலான வேலை வாய்ப்புச் சந்தையில் மொத்தம் 4,260 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அவற்றில் 2,870 பணியிடங்களில் குறைந்தபட்ச சம்பளமான 2,000 வெள்ளிக்கும் மேல் சம்பளம் வழங்கப்படுவதாகவும், நிலையான வருமானத்துடன் தரமான வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பொருத்தமானதாக அமைவதாகவும் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு
கூறினார்.
இந்த நிகழ்வில் உற்பத்தி, சேவைகள், சரக்கு போக்குவரத்து, தொழில்நுட்பம் மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 29 முதலாளிகள் பங்கேற்றனர்.
சம்பந்தப்பட்ட முதலாளிகளில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களும் பயிற்சி வழங்குநர்களும் உள்ளனர். அவர்கள் வேலை வாய்ப்பு வாய்ப்புகளையும் திறன் மேம்பாட்டையும் வழங்குகிறார்கள் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த வேலை வாய்ப்புச் சந்தைகளில் 6,000க்கும் மேற்பட்ட வேலை தேடும் நபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
வேலை தேடுவோரில் எஸ்.பி.எம். முடித்தவர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகள், வேறு தொழிலுக்கு மாற விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத நபர்கள் அடங்குவர்.
வேலை தேடுபவர்கள் முதலாளிகளுடன் நேரடியாக கலந்துரையாடல் நடத்தும் வகையில் நேரடி நேர்காணல் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் ஜோப்கேர் நிகழ்வு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறைந்த, நடுத்தர மற்றும் உயர் திறமையான தரப்பினருக்கு உதவுவதற்கான மாநில அரசின் ஒரு முயற்சியாகும்.
2024 ஆம் ஆண்டில், ஜோப்கேர் திட்டம் மூலம் சிலாங்கூர் மக்களுக்கு தோராயமாக 35,000 வேலை வாய்ப்புகளை வழங்கப்பட்டன.
ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தை நடைபெறும் இடங்கள் பின்வருமாறு-
• 24 மே – பெட்டாலிங் (பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற சமூக மண்டபம்
• 21 ஜூன் –கோல லங்காட் (டேவான் ஸ்ரீ ஜூக்ரா)
• 05 ஜூலை – உலு சிலாங்கூர் (டேவான் மெர்டேக்கா கோல குபு பாரு)
• 19 ஜூலை – உலு லங்காட் (அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக மண்டபம்)
• 27 ஜூலை – கிள்ளான் (டேவான் ஹம்சா)
• 09 ஆகஸ்ட் – கோல சிலாங்கூர் (புஞ்சா ஆலம் எம்.பி.கே.எஸ். மண்டபம்)
• 11 அக்டோபர் – சபாக் பெர்ணம் (டேவான் துன் ரசாக்)
• 15 நவம்பர் – சிப்பாங் (டேவான் கம்யூனிட்டி பி.பி.எஸ்.டி.


