லங்காவி, மே 19 - இங்கு நடைபெறவிருக்கும் 2025 லங்காவி அனைத்துலக
கடல் மற்றும் வான் கண்காட்சியில் வான் சாகச நிகழ்வில்
பங்கேற்பதிலிருந்து இந்திய ஆகாயப் படையின் சூரியா கிரான்
ஏரோபேட்டிக் குழு விலகியுள்ளது.
ஈராண்டுகளுக்கு ஓரு முறை நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு
தொடக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்த இந்தியா, அந்நாட்டில் நிலவும்
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அந்த முடிவை ரத்து
செய்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின்
கூறினார்.
அவர்களால் (இந்தியா) இத்திட்டத்தை தொடர இயலவில்லை. அதற்கான
காரணம் அதாவது அந்நாடு தற்போது எத்தகைய சவால்களை எதிர்நோக்கி
வருகிறது என்று நமக்கும் தெரியும் என்று லீமா’25 கண்காட்சியின்
முன்னேற்பாடுகளை நேரில் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் தெரிவித்தார்.
ஆகாய சாகசக் கண்காட்சியிலிருந்து இந்தியா விலகிய போதிலும்
ரஷ்யாவின் ருஷ்யன் நைட்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் ஜூபிட்டர்
போன்ற குழுக்களைக் கொண்டு இந்த வான் சாகச நிகழ்ச்சி நடத்தப்படும்
என்று அவர் சொன்னார்.
பதினேழாவது முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சியில் மொத்தம் 57
விமானங்கள் பங்கேற்கும். அவற்றில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்
சேர்ந்த 43 நிலையான விமானங்களும் அடங்கும். கடந்த 23ஆம் ஆண்டு
நடைபெற்ற கண்காட்சியில் 34 விமானங்கள் மட்டுமே பங்கேற்றன என்றார்
அவர்.
உள்நாட்டைச் சேர்ந்த 26 விமானங்களும் புருணை, ஜெர்மன், இத்தாலி
கனடா, சிங்கப்பூர், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 விமானங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்கவிருக்கின்றன. இவை தவிர இந்தியா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தக விமானங்களும் இதில் பங்கு கொள்கின்றன என்றார் அவர்.
கடல் சார் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 31
கப்பல்கள் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் என
அவர் சொன்னார்.


