ஈப்போ, மே 19 - ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதன் மூலம் ஒன்பது மத்திய சேமப்படை (எஃப்.ஆர்.யு.) வீரர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட டிரெய்லர் லோரி ஓட்டுநருக்கு இன்று காலை ஜாமீன் வழங்கப்பட்டது.
அவரது முதலாளி ஒரு நபர் உத்தரவாதத்துடன் 6,000 வெள்ளி ஜாமீன் தொகையை செலுத்தியதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஜைனல் அபிடின் கூறினார்.
அந்த ஓட்டுநரின் முதலாளி ஒரு நபர் உத்தரவாதத்துடன் 6,000 வெள்ளி ஜாமீன் தொகையை செலுத்தியுள்ளார். ஆகவே, அந்த லோரி ஓட்டுநருக்கு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்படும் என அவர் சொன்னார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்று ஹிலிர் பேராக் மாவட்ட காவல் தலைமையக லாக்கப்பிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி ஒன்பது எஃப்.ஆர்.யு. உறுப்பினர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 45 வயதான ரூடி ஜூல்கர்னைன் மாட் ராடியை 6,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க தெலோக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
இருப்பினும், தனக்கு எதிராக தெலோக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41 (1) பிரிவின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 50,000 வெள்ளிக்கும் மிகாத அபராதம் விதிக்கப்படலாம். மேலும் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும் பெறவும் தகுதி நீக்கம் செய்யப்படும்.
ஜாமீன் தொகையை செலுத்தத் தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஓட்டுநர் இன்று காலை வரை சிறையில் அடைக்கப்பட்டார்.


