ஜகார்த்தா, மே19 - நேற்று இந்தோனேசியாவின் நுசா தெங்காரா தீமோரில் உள்ள லெவோதோபி எரிமலை பல முறை வெடித்தது.
இதனால், வானில் 6,000 மீட்டர் உயரத்திற்கு அது கரும்புகையையும் சாம்பலையும் கக்கியது. அதனை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, வான் போக்குவரத்துக்கு உச்சக் கட்ட அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
புகை மூட்டம் காரணமாக விமானப் பயணச் சேவையில் தடங்கல் ஏற்படலாம் என்றும் விமான நிறுவனங்களுக்கு நினைவுறுத்தப்பட்டது.
உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய எரிமலை குழம்பிலிருந்து குறைந்தது 6 கிலோ மீட்டர் தூரம் வரை தள்ளியிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தடை சுற்றுப்பயணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், எரிமலை லாவாக்கள், மழையின் காரணமாக எரிமலை உச்சியிலிருந்து ஆற்றில் வழிந்தோடலாம் எனவும் மலைவாழ் மக்களுக்கும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புக் கருதி அப்பகுதியில் உள்ள அனைவரும் சுவாசக் கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1,584 மீட்டர் உயரத்தைக் கொண்ட இந்த எரிமலை, இந்தோனேசியாவில் இன்னமும் தீவிரமாக உள்ள 127 எரிமலைகளில் ஒன்றாகும்.


