கோல திரெங்கானு, மே 19 - இல்லாத வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி இல்லத்தரசி ஒருவர் 158,498.89 வெள்ளித் தொகையை இழந்தார்.
பாதிக்கப்பட்ட அந்த 30 வயதுடையப் பெண் 10 விழுக்காடு கமிஷன் தொகை கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்வதற்கான வேலை வாய்ப்பினை வழங்கும் விளம்பரத்தை கடந்த மே 9 ஆம் தேதி சமூக ஊடக தளத்தில் கண்டதாக கோல திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் கூறினார்.
ஹோட்டலின் மதிப்பீட்டை அதிகரிப்பதே இந்தப் பணியின் நோக்கம் என்று அப்பெண்ணிடம் கூறப்பட்டுள்ளது. ஹோட்டல் அறையைத் தேர்வு செய்வதற்கு வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்து பணி முடிந்ததும் ஒரு புகைப்படத்தையும் கட்டணச் சான்றையும் அனுப்ப வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டது.
தனது முதல் பணிக்கான கமிஷன் பெற்றதைத் தொடர்ந்து உற்சாகம் அடைந்த அந்தப் பெண், ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு படிப்படியாக வெ.158,498.89 தொகையை அனுப்பி மற்றொரு பணியையும் முடித்துள்ளார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தனது தந்தையின் வணிக மூலதனத்தைப் பயன்படுத்திய இல்லத்தரசி வாக்குறுதியளிக்கப்பட்டபடி கமிஷன் கிடைக்கப் பெறாததால் பெரிதும் அச்சமடைந்தார் சந்தேக நபரைத் தொடர்பு கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது என அஸ்லி கூறினார்.
இந்த மோசடி தொடர்பில் அந்தப் பெண் நேற்று காலை 11.42 மணிக்கு போலீசில் புகார் அளித்ததாகவும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


