கோலாலம்பூர், மே 19 - திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சித் திட்ட மாணவர் சேர்ப்பு பிரிவு மையப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்களிடமிருந்து கடந்த ஏப்ரல் மாதத் தொடங்கி இதுவரை 106,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
எதிர்வரும் ஜூன் மாதவாக்கில் இந்த எண்ணிக்கை 150,000 மாணவர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
திவேட் திட்டம் தொடர்பான புதிய அணுகுமுறை நல்ல பலனைத் தந்துள்ளதை இந்த எண்ணிக்கை உயர்வு காட்டுவதாக அவர் சொன்னார். அனைத்து மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவதில்லை. ஆகவே, இதனைக் கருத்தில் கொண்டு சிறப்பான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய திவேட் போன்ற மாற்றுத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மலேசிய தொழில்திறன் பயிற்சி சான்றிதழ் திட்டத்தின் மூன்றாம் நிலையை (எஸ்.கே.எம்.-3) எட்டினால் அது எஸ்.பி.எம். தேர்வின் தகுதிக்கு இணையானதாகிவிடும். இதன் வழி 2,500 வெள்ளி வரை சம்பளம் பெற இயலும். அதே சமயம், எஸ்.கே.எம்.-4 மற்றும் எஸ்.கே.எம்.-5 ஆகியவை டிப்ளோமாவுக்கு இணையான கல்வித் தகுதியாக விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிவு இங்கு நடைபெற்ற கூட்டரசு பிரதேச நிலையிலான தேசிய இளைஞர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது நாட்டிலுள்ள ஆறு உயர் கல்விக்கூடங்கள் திவேட் பயிற்சியை வழங்குவதாக கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
இளைஞர்களை அந்த திவேட் திட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் அதேவேளையில் இ-ஹெய்லிங் மற்றும் பி- ஹெய்லிங் போன்ற தற்காலிக பொருளாதாரத் துறைகளில் ஈடுபட்டுள்ள 11 லட்சத்து 60 இளையோருக்கு உதவும் கடப்பாட்டையும் அரசாங்கம் கொண்டுள்ளது என்றார் அவர்.


