NATIONAL

நாட்டின் மேம்பாட்டிற்கு நவீன தொழில்நுட்பத் துறைகளில் இளைஞர்கள் ஆற்றல் பெற வேண்டும்

19 மே 2025, 4:44 AM
நாட்டின் மேம்பாட்டிற்கு நவீன தொழில்நுட்பத் துறைகளில் இளைஞர்கள் ஆற்றல் பெற வேண்டும்

கிள்ளான், மே 19 - நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  திறன்களுடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உள்ளிட்ட நவீன தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் இளைஞர்களின் திறன் நாட்டின் எதிர்கால நிலைத்தன்மை மற்றும் சுபிட்சத்திற்கான திறவுகோல்களில் ஒன்றாகும் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தொடர்ந்து வளர்ந்து  வரும் இந்த  உலகில் சக மனிதர்களிடம் நன்மையை விதைக்கவும் நல்வாழ்வை மேம்படுத்தவும் மனுக்குல மதிப்புக்கூறுகளை ஊக்குவிக்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆற்றல் நமக்கு உள்ளது என அவர் சொன்னார்.

இளைஞர்கள் நிச்சயமாக  நாட்டின் நம்பிக்கையாகவும்   எதிர்காலத் தலைமைத்துவத்தின்  நிலைத்தன்மைக்கான உத்தரவாதமாகவும் விளங்குகின்றனர் என்று  நேற்றிரவு நடைபெற்ற மாநில அளவிலான  தேசிய இளைஞர் தின  நிறைவு விழாவுக்கு வழங்கிய உரையில் அவர் குறிப்பிட்டார்.

மந்திரி பெசாரின் உரையை  சுகாதாரத் துறைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  ஜமாலியா ஜமாலுடின் வாசித்தார்.

கடந்த சனிக்கிழமை தொடங்கி கேஎஸ்எல் எஸ்பிளனேட் மாலில் நடைபெற்ற  இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  கலந்து கொண்டனர்.

இதில் தொழில் கண்காட்சிகள், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (திவேட்), மின் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

"நம்பினால் முடியும்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பல்வேறு அரசு நிறுவனங்களின் கண்காட்சி, இலவச  சட்ட  ஆலோசக சேவை, வேலை வாய்ப்பு சந்தை உள்ளிட்ட அங்கங்களும் இடம் பெற்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.