கிள்ளான், மே 19 - இங்குள்ள கேஎஸ்எல் எக்ஸ்பிலேனட் மாலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான தேசிய இளைஞர் தினம் இளம் தலைமுறையினரிடையே தலைமைத்துவப் பண்புகளை விதைக்கும்
களமாக விளங்கியதோடு ஆசியான் வாயிலாகப் பிராந்திய அளவில்
ஒருங்கமைப்புக்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தியது.
சுமார் 5,000 இளைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் வேலை வாய்ப்பு
கண்காட்சி, தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சி (திவேட்) மற்றும்
அனைத்துலக ஒருங்கமைப்பு தொடர்பான புரிதலை ஏற்படுத்தும்
அங்கங்களும் இடம் பெற்றன என்று சிலாங்கூர் இளைஞர் மன்றத்தின்
தலைவர் டத்தோ இம்ரான் தம்ரின் கூறினார்.
ஆசியான் தலைவராக மலேசியா இவ்வாண்டு பொறுப்பேற்றுள்ள
நிலையில் அதன் தொடர்பான சிறப்பு கண்காட்சிக் கூடத்தை நாங்கள்
திறந்தோம்.. வட்டார கண்ணோட்டத்தை இளைஞர்கள் அறிந்து
கொள்வதற்குரிய வாய்ப்பினை இது வழங்கியது என அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் இளைஞர்களின் பங்கேற்பு பொருளாதாரம், சமூகவியல்
மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டில் நேர்மறையான தாக்கங்களை
ஏற்படுத்தும். இது தவிர அவர்கள் மத்தியில் படைப்பாற்றல் வளர்வதற்கும்
வாய்ப்பு ஏற்படுத்தியது என்றார் அவர்.
‘முடியும் என நம்புங்கள்‘ என்ற கருப்பொருளிலான இந்த இரண்டு நாள்
நிகழ்வில் மின்-விளையாட்டு, கலாசார படைப்புகள், சட்ட ஆலோசக
சேவை மற்றும் பல்வேறு துறைகளின் கண்காட்சியும் இடம் பெற்றது
என்ற அந்நிகழ்வில் உரையாற்றி போது இம்ரான் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சார்பில்
சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின்
முடித்து வைத்து உரையாற்றினார்.


