கோத்தா பாரு, மே 19 - குத்தகையாளர் ஒருவரிடமிருந்து சுமார் 14,000 வெள்ளியை லஞ்சமாகப் பெற்ற சந்தேகத்தின் பேரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்பு கிளந்தான் மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் அந்நபர், வாக்குமூலம் அளிக்க நேற்று மதியம் 1.00 மணியளவில் கிளந்தான் எம் ஏ.சி.சி. தலைமையகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி குத்தகையாளரிடமிருந்து பணம் மற்றும் பல்வேறு மதிப்புமிக்க பொருட்களைப் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது என்று எம்.ஏ.சி.சி. வட்டாரம் பெர்னாமாவிடம் தெரிவித்தது.
இதற்கிடையில், கிளந்தான் எம்.ஏ.சி.சி. இயக்குநர் ரோஸ்லி ஹூசேனைத் பெர்னாமா தொடர்பு கொண்டபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் சந்தேக நபர் மீது இன்று கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165 இன் கீழ் குற்றம் சாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.


