ஷா ஆலம், மே 19 - அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று அதிகரித்த போதிலும் சிலாங்கூரில் அந்நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் சமீபத்திய நிலவரப்படி இவ்வாண்டு 19வது தொற்று நோயியல் வாரத்தில் சிலாங்கூரில் ஒட்டுமொத்தமாக 3,807 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளையில் கடந்த 2024ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 14,542ஆக இருந்தது என்று அவர் கூறினார்.
12வது தொற்று நோய் வாரத்திலிருந்து இந்நோயின் வாராந்திர பரவல் அளவு குறைந்து வருகிறது. வாராந்திர அடிப்படையில் பதிவாகும் சம்பவங்கள் தொடர்ந்து 100க்கும் குறைவாகவே உள்ளன.
பல அண்டை நாடுகளில் கோவிட்-19 தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நமது தொடர்ச்சியான முயற்சிகளும் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதும் பயனுள்ளதாக இருப்பதை இது நிரூபிக்கிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோவிட்-19 நிலைமையை அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்லி அகமது நேற்று தெரிவித்தார் .
இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பொது மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிலாங்கூர் மக்களுக்கும் ஜமாலியா பாராட்டுகளைத் தெரிவித்தார்.
நிலைமை சீராக இருந்தாலும் பொதுமக்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள தரப்பினர் விழிப்புடன் இருக்க வேண்டும். அதேவேளையில் கோவிட்-19 அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசும் மாநில சுகாதாரத் துறையும் நிலைமையை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து பொது சுகாதார அமைப்பு உரிய எச்சரிக்கையுடன் இருப்பதை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.


