காஸா நகர்/இஸ்தான்புல், மே 18- இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளதோடு 300,000 குடியிருப்பாளர்களை வட காஸா பகுதியிலிருந்து காஸாஸிற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக காஸா ஊடக அலுவலகத்தை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் இரத்தக்களரி நிறைந்த பதிவில் சேரும் மற்றொரு குற்றத்தில், கடந்த 48 மணி நேரத்தில் வட காஸா பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்ச்சியான படுகொலைகளின் ஒரு பகுதியாகும் என்று அந்த அலுவலகம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இஸ்ரேலியப் படைகள் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்துள்ளதோடு 300,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத
காஸா நகரத்திற்கு இடம்பெயர கட்டாயப்படுத்தியதாகவும் காஸா ஊடக அலுவலகம் குறிப்பிட்டது.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகள் சென்றடைவதை வேண்டுமென்றே தடுத்த இஸ்ரேலிய இராணுவத்தின் நடவடிக்கைகள் காரணமாக சுமார் 140 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இனப் படுகொலைகள் தீவிரமாக நிகழ்ந்து வரும் நிலையில் ஜபாலியா முகாமில் உள்ள டெல் அல்-ஜாதர், பெய்ட் லாஹியா நகரம் மற்றும் வடக்கில் உள்ள பிற பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கூடாரங்களை இஸ்ரேலிய ட்ரோன்கள் தீயிட்டதன் மூலம் தங்கள் தாக்குதல்களை மையப்படுத்தியதாக அலுவலகம் தெரிவித்தது.
காஸா நகரத்தின் நிலைமையைப் பொறுத்தவரை நகரில் போதுமான கூடாரங்கள் அல்லது தங்குமிடங்கள் இல்லாததால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தெருக்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஹமாஸ் இயக்கத்துடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ரத்து செய்த மார்ச் 18 அன்று காஸா மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்தத் தொடங்கியது. தாக்குதல்கள் தொடங்கிய அக்டோபர் 2023 முதல் இறந்தவர்களின் எண்ணிக்கை 53,200 பேரைத் தாண்டியுள்ளது.


