ஈப்போ, மே 18- இங்குள்ள லோரோங் தெபிங் திங்கி 2, கம்போங் தெபிங் திங்கியில் இன்று காலை வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
அறுபத்தோரு வயதுடைய அந்த முதியவரின் உடல் கருகிய நிலையில் வீட்டின் சமையலறையில் கண்டெடுக்கப்பட்டதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது
கூறினார்.
அதிகாலை 2.35 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து
பாசீர் பூத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து எட்டு உறுப்பினர்கள் ஒரு இயந்திரத்துடன் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இத்தீவிபத்தில் அந்த வீடு 90 சதவீதம் எரிந்து போனது. தீயை அணைக்க செயல்பாட்டுத் அதிகாரி தீயணைப்புப் படையினருக்கு யெஸியோ நுட்பத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டார்.
தீயை அணைக்கும் பணியின் போது முதியவரின் உடல் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் நடவடிக்கை அதிகாலை 5.44 மணிக்கு முடிவடைந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.


