கோலாலம்பூர், மே 18- இவ்வாண்டு ஆறாம் படிவ முதல் தவணைக்கான நுழைவு விண்ணப்ப முடிவுகளை மாணவர்கள் நாளை முதல் https://sst6.moe.gov.my/ என்ற இணைப்பு வழியாக அல்லது அந்தந்த பள்ளிகள் மூலம் சரிபார்க்கலாம் .
வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மே 19 முதல் 25 வரை மேல்முறையீடு செய்யலாம் என்றும் மேல்முறையீட்டு முடிவை ஜூன் 3 ஆம் தேதி அதே முறையின் மூலம் சரிபார்க்கலாம் என்றும் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்
தெரிவித்தது.
2025 கல்வியாண்டு முதல் பொதுப் பல்கலைக்கழகங்களில் ஆறாவது படிவக் கல்வித் திட்டத்தை உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சு அமல்படுத்துகிறது.
இந்தத் திட்டம் மலேசியா தேசிய பல்கலைக்கழகம் (யு கே.எம்.) மற்றும் மலேசியா அறிவியல் பல்கலைக்கழகம் (யு.எஸ்.எம்.) ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய இரண்டு துறைகளில் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வை எழுதி ஆறாம் படிவத்தில் நுழைவதற்கான குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள் நாளை மே 19 முதல் 25 வரை பொதுப் பல்கலைக்கழகங்களில் ஆறாம் படிவக் கல்வித் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுகளை ஜூன் 3 ஆம் தேதி https://sst6.moe.gov.my/ என்ற இணைப்பின் மூலம் சரிபார்க்கலாம் என்று கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் படிவத்தில் சேருவதற்கான சலுகையைப் பெறும் அனைத்து மாணவர்களும் ஜூன் 10 ஆம் தேதி சலுகைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவம் ஆறாம் மையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


