ஜோர்ஜ் டவுன், மே 18 - தொழிற்சாலை பொறியாளர் ஒருவர் சமீபத்தில் இணைய முதலீட்டு மோசடியில் சிக்கி சேமிப்புத் தொகையான 300,000 வெள்ளியை இழந்தார்.
அந்த முதலீட்டுத் திட்ட மோசடிக்கு பலியானது தொடர்பில் 55 வயதுடைய அந்நபரிடமிருந்து நேற்று முன்தினம் காவல்துறைக்கு புகார் வந்ததாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.
குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு உறுதியளிக்கும் பங்கு கொள்முதல் மற்றும் விற்பனை அடிப்படையிலான முதலீட்டு விளம்பரத்தை அவ்வாடவர் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் முகநூலில் பார்த்ததாக அவர் சொன்னார்.
அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் சந்தேக நபரான ஒரு பெண்ணை அந்த பொறியாளர் தொடர்பு கொண்டுள்ளார்.
முதலீட்டில் பங்கேற்க ஆர்வம் கொண்டிருந்த அந்த பொறியாளர் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து உறுப்பினராகப் பதிவு செய்து அதில் முதலீடு செய்யுமாறு பணிக்கப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த நபர் முதலீட்டிற்காக ஒரு நிறுவனத்தின் பெயரில் உள்ள கணக்கில் ஏழு பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை செலுத்தியதாக ஹம்சா கூறினார்.
பின்னர் 52,800 வெள்ளியை கூடுதலாக முதலீடு செய்யும் நோக்கில் பாதிக்கப்பட்ட நபர்
வங்கி ஒன்றின் முகப்பிடத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த பரிவர்த்தனைக்கு வங்கி அனுமதிக்காததோடு அவர் மோசடிக்கு ஆளாகியுள்ளதாகத் தகவலையும் தெரிவித்துள்ளது என்றார் அவர்.
இந்த மோசடி தொடர்பில் பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்ததாகக் கூறிய ஹம்சா, தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.


