பத்து பஹாட், மே 18- இங்கு, தாமான் ஸ்ரீ மூலியாவிலுள்ள ஒரு வீட்டில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ஆடவர் ஒருவரை கைது செய்து 16 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஒரு மாதமாக போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பந்தப்பட்ட நபர், தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில் மாலை சுமார் 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பத்து பஹாட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்தார்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 15.8 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 9.4 கிலோகிராம் எக்ஸ்டசி பவுடரும் வெ.23,000 மதிப்புள்ள 460 கிராம் கெட்டமினும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த போதைப்பொருள் சந்தைப்படுத்தப்பட்டால் சுமார் 47,000 போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்த முடியும் என்று அவர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்
தனியொருவராக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அந்த நபர், அவ்வீட்டை போதைப் பொருள் சேமிப்பு கிடங்காகவும் மறு பொத்தலமிடும் இடமாகவும் பயன்படுத்தி வந்ததாக அவர் கூறினார்.
இச்சோதனையின் போது அவ்வாடவரிடமிருந்து ஒரு காரும் 45,000 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர் போதைப்பொருளை பயன்படுத்தவில்லை என்பது சிறுநீர் சோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் முந்தைய குற்றப் பதிவுகளும் அவருக்கு இல்லை. 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39 பி இன் கீழ் விசாரணைக்காக திங்கட்கிழமை வரை அவ்வாடவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


