கோலாலம்பூர், மே 18- மோசடியினால் பணத்தை மீட்பதற்கான சேவைகளை வழங்கும் சமூக ஊடக விளம்பரங்களில் ஈடுபடுவதை அரச மலேசிய போலீஸ்படை மறுத்துள்ளது.
அரச மலேசிய போலீஸ் படையின் சின்னம் மற்றும் "அரச மலேசிய போலீஸ் படை, வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (சி.சி.ஐ.டி.)" என்ற வாசகம் கொண்ட விளம்பரம் முகநூலில் வெளியிடப்பட்டதை தனது துறை கண்டறிந்ததாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோஸ்ரீ ஹஸ்புல்லா அலி கூறினார்.
அரச மலேசிய போலீஸ் படையின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் இந்த விளம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் வழங்கப்படும் அத்தகையச் சேவைகள் பொய்யானவை என்பதோடு மோசடி முயற்சி என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் இத்தகைய விளம்பரங்களால் ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


