தெலுக் இந்தான், மே 16 - ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 13) நிகழ்ந்த சாலை விபத்தில் ஒன்பது மத்திய சேமப்படை (எஃப்.ஆர்.யு.) உறுப்பினர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக லோரி ஓட்டுநர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நோர்ஹமிசா சைபுடின் முன்னிலையில் தனக்கு எதிராக தனித்தனியாக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை 45 வயதான ரூடி ஜூல்கர்னைன் மாட் ராடி மறுத்து விசாரணை கோரினார்..
கடந்த மே 13 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு ஜாலான் சுங்கை மாணிக் 15வது கிலோ மீட்டரில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி ஒன்பது எஃப்.ஆர்.யு. உறுப்பினர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக அந்த லோரி ஓட்டுநர் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 20,000 வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 (1) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
மேலும், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதிலிருந்தும் பெறுவதிலிருந்தும் ரூடி தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்டவரை ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 10,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும் வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை முடக்கி வைக்கவும், ஒவ்வொரு வாரமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராகவும் துணை அரசு வழக்கறிஞர் இஸ்ஸுடின் ஃபக்ரி ஹம்டான் நீதிமன்றத்தில்
பரிந்துரைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான தேசிய சட்ட உதவி அறக்கட்டளை வழக்கறிஞர் பிரான்சிஸ் சின்னப்பன், இன்னும் திருமணமாகாத குற்றம் சாட்டப்பட்டவர் மாதத்திற்கு 2,500 மட்டுமே சம்பாதித்து வருவதோடு ஆஸ்துமா நோயாலும் அவதிப்படுவதால் குறைந்தபட்ச ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவரை அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் 6,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, அரசு தரப்பு துணை வழக்கறிஞர் நிர்ணயித்த நிபந்தனைகளையும் பின்பற்ற உத்தரவிட்டார்.
வழக்கை மீண்டும் விசாரிக்க ஜூன் 17 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.


