ஷா ஆலம், மே 16- ஷா ஆலம் புதிய விளையாட்டுத் தொகுதியின்
(கே.எஸ்.எஸ்.ஏ.) நிர்மாணிப்புக்காக இன்று நடைபெற்ற ஒப்பந்த
ஒப்படைப்புச் சடங்கு, நீண்ட காலம் காத்திருந்த தொலைநோக்குத் திட்டம்
நனவாகும் தருணமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
வர்ணித்தார்.
நிறைவேற்றம் காணுமா என்ற மக்களின் சந்தேகத்திற்கு மத்தியில்
உருவாக்கம் காணும் இத்திட்டம் மிகப்பெரிய மைல்கல்லாகவும்
விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
அளவில் பெரிதான மற்றும் சிக்கல் நிறைந்த இந்த திட்டத்திற்கு
துல்லியமான திட்டமிடலும் கால அவகாசமும் தேவைப்படுவதாகக் கூறிய
அவர், இத்திட்டம் குறித்த மக்களின் சந்தேகமும் புரிந்து கொள்ளக்கூடியதே
என்றார்.
கடந்த ஆண்டுகளில் சிலாங்கூர் இந்த திட்டத்தின் மேம்பாடுகளை மிகுந்த
எதிர்பார்ப்புடன் கவனித்து வந்தது. இந்த திட்டம் நிறைவேறுமா என சிலர்
சந்தேகங்களை எழுப்பினர். அவர்களின் சந்தேகமும் நியாயமானதுதான்
என்று அவர் சொன்னார்.
இன்று, சிலாங்கூர் மக்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு
தொலைநோக்குத் திட்டத்தை நனவாக்குவதில் நாம் புதிய மைல் கல்லை
பெருமித்துடன் அடைந்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள டபள் ட்ரி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற
இத்திட்டம் தொடர்பான ஒப்பந்தக் கடிதத்தை ஒப்படைக்கும் நிகழ்வில்
உரையாற்றும் போது அவர் அவ்வாறு கூறினார்.
சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவின் தொலைநோக்குத்
திட்டமான இது மாநில அரசின் ஆதரவுடன் முழு வடிவம் பெற பல
ஆண்டுகள் பிடித்தன என்று அமிருடின் சொன்னார்.
இது வெறும் கட்டமைப்பு புதுப்பிப்பு அல்ல. மாறாக, சிலாங்கூரின்
எதிர்காலத்திற்கான கூட்டு அபிலாஷைகளின் அடையாளமாக இத்திட்டம்
விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் மாநிலத்தின் வளமிக்க வரலாற்றை ஆழமாகப் போற்றும்
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தென்கிழக்காசியா
மற்றும் ஆசிய அரங்கில் சிலாங்கூரை ஒரு முக்கிய இடத்தில் நிறுத்தும்
தளமாகவும் இது விளங்குகிறது என்றார் அவர்.


