ஷா ஆலம், மே 16 - பண்டார் புஞ்சா ஆலமில் உள்ள நான்கு மையங்கள்
மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் 300,000 வெள்ளி
மதிப்புள்ள 62 பிட்காயின் இயந்திரங்கள் மற்றும் 18 பிட்காயின் இயந்திர
காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முறையான லைசென்ஸ் இன்றியும் மின்சார விநியோகத்தை
துஷ்பிரயோகம் செய்தும் நடத்தப்பட்ட இந்த வர்த்தக வளாகங்களுக்கு
எதிரான நடவடிக்கையில் சிலாங்கூர் மாநில தெனாகா நேஷனல்
பெர்ஹாட் நிறுவனமும் பங்கு கொண்டதாக கோல சிலாங்கூர்
நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எஸ்.) கூறியது.
இந்த சோதனையின் போது நான்கு வளாகங்களை மூடுவதற்கான
உத்தரவை நகராண்மைக் கழக அமலாக்கத் துறை வெளியிட்டது. அதே
வேளையில் தவறான வழியில் திருத்தியமைக்கப்பட்ட மின்சார மீட்டரை
தெனாகா நேஷனல் நிறுவனம் சரி செய்தது என்று அது குறிப்பிட்டது.
இந்த நான்கு வர்த்தக வளாகங்களும் ஆலம் இண்டா தொழில்பேட்டை
மற்றும் ஆலம் ஜெயா வர்த்தக மையம் ஆகிய இடங்களில்
அமைந்துள்ளன. இந்த நான்கு வளாகங்களும் லைசென்ஸ் இன்றி
செயல்பட்டு வந்ததோடு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தையும்
பயன்படுத்தி வந்துள்ளது இச்சோதனையில் கண்டறியப்பட்டது.
இந்த நான்கு வளாகங்களிலிருந்தும் 62 பிட்காயின் இயந்திரங்களும் 16
பிட்காயின் இயந்திர காற்றாடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின்
மதிப்பு 300,000 வெள்ளி என மதிப்பிடப்படுகிறது.
அந்த சாதனங்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் சட்ட
விதிகளுக்கு ஏற்ப இதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.
தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட அமலாக்கத்தை உறுதி
செய்வதில் குறிப்பாக லைசென்ஸ் இல்லாத மற்றும் சட்டவிரோதமாக
மின்சாரத்தை பயன்படுத்தும் வளாகங்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்
தாங்கள் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தவுள்ளதாக அது தெரிவித்தது.


