நீலாய், மே 16 - கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தலில்
தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இரு கொள்ளையர்கள்
இங்குள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கார்
நிறுத்துமிடத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
கொல்லப்பட்டனர்.
நேற்றிரவு 10.00 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்
கொல்லப்பட் 40 மற்றும் 20 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் சிலாங்கூர்,
நெகிரி செம்பிலான் மற்றும் பேராக்கில் வீடுகள், தொழிற்சாலைகள்,
கூரியர் சேகரிப்பு மையங்களில் கொள்ளையிடும் செயலில் தீவிரமாக
ஈடுபட்டு வந்ததாக புக்கிட் அமான் குற்றப்புனாய்வுத் துறையின் உளவு
மற்றும் நடவடிக்கைப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ ஃபாட்டில்
மர்ஸுஸ் கூறினார்.
நாற்பது வயது மதிக்த்தக்க சந்தேக நபருக்கு போதைப் பொருள் மற்றும்
வன்முறையில் ஈடுபட்டது தொடர்பில் 76 குற்றப்பதிவுகளும் 30 வயது
மதிக்கத்த ஆடவருக்கு அதே குற்றங்கள் தொடர்பில் 11 குற்றப்பதிவுகளும்
உள்ளதாக சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்
குறிப்பிட்டார்.
போலீசாரிடமிருந்து காரில் தப்பிச் செல்ல முயன்ற அவ்விரு
கொள்ளையர்களையும் போலீசார் வழி மறித்ததாகவும் அப்போது இரு
தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் வாகனம்
மீது தோட்டா பாய்ந்ததாகவும் அவர் சொன்னார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீஸ்காரர்களுக்கு காயம்
ஏற்படவில்லை. இக்கொள்ளையர்கள் மற்ற மாநிலங்களிலும் கடும் குற்றச்
செயல்களில் ஈடுபட்டிருப்பர் என நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
அக்கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு பகுதி தானியங்கி
துப்பாக்கி மற்றும் ஒரு ரிவால்வரை போலீசார் கைப்பற்றியதாக அவர்
மேலும் தெரிவித்தார்.
இக்கும்பலின் இதர உறுப்பினர்களைக் கைது செய்வதற்காக
சிலாங்கூரிலுள்ள பல ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார்
தீவிர சோதனையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த கைது நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்
தொடர்பான விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.


