கப்பளா பாத்தாஸ், மே 16 - அண்மையில் நடைபெற்ற கெஅடிலான்
கட்சியின் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அப்பொறுப்பினை
துறக்கப் போவதாக மிரட்டும் அல்லது கட்சியின் தேசிய மாநாடு சீராக
நடைபெறுவதற்கு இடையூறாக இருக்கும் தரப்பினருக்கு எதிராக கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பதவி துறப்பு நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து சம்பந்தப்பட்ட தரப்பினரை தடுக்கும் வகையில் அவர்களின் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
வெற்றி பெற்றத் தொகுதி தலைவரைப் பிடிக்காத அல்லது அந்த வெற்றியில் உடன்படாத சில செயல்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியைத் துறக்கப்போவதாக மிரட்டி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஃபுஸியா சாலே அண்மையில் கூறியுள்ளதை
ஃபாஹ்மி சுட்டிக்காட்டினார்.
அத்தகைய முடிவை எடுக்கும் (பதவி துறப்பு) தரப்பினரை மறு தேர்தலில்
போட்டியிடுவதிலிருந்து தடுப்பது மற்றும் அவர்களை பெயர்களை கருப்பு
பட்டியலில் சேர்ப்பதுத உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க ஃபுஸியாவும்
தேர்தல் குழுவும் முடிவெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.
நேற்றிரவு இங்குள்ள டேவான் தோக் மாட் யாகூவில் நடைபெற்ற
ஜெலாஜா கித்தா கெஅடிலான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஃபுஸியா, கடந்த மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தல் முடிவுகள் மீது அதிருப்தி கொண்ட லெங்கோங் மற்றும் மஸ்ஜிட் தானா தொகுதி செயல்குழு உறுப்பினர்கள் பதவி துறக்கப்போவதாகக் கூறியுள்ளது தொடர்பான விளக்கத்தை உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
இருப்பினும், கட்சியின் முடிவு சம்பந்தப்பட்ட இரு தொகுதிகளின் செயல்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பதவி துறக்கும் முடிவை மறுஆய்வு செய்ததோடு அதனை ரத்தும் செய்ததாக தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபாஹ்மி தெரிவித்தார்.


