கோலாலம்பூர், மே 16 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் நாட்டிலுள்ள அனைத்து கல்வியாளர்களுக்கும் தங்களின் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தங்கள் அறிவைப் பொழியும் சிறந்த மனிதர்கள் ஆசிரியர்கள் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் பேரரசர் கூறினார்.
ஆசிரியர்கள் இன்றி அறிவு கிட்டுவதில்லை. அறிவு இல்லாவிடில் பாதை இருண்டதாக இருக்கும். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் நமது பாதையை ஒளிரச் செய்யும் ஒளிதான் ஆசிரியர்கள் என அவர் குறிப்பிட்டார்.
நகரமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி, உங்கள் சேவை மற்றும் தியாகங்களுக்காக அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. உங்கள் சேவை எப்போதும் நினைவுகூறப்படும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்கான 54வது தேசிய ஆசிரியர் தினக் கொண்டாட்டம் சரவாக் மாநிலத்தின் கூச்சிங்கில் புதன்கிழமை 'கல்வி சீர்திருத்தத்தை நோக்கி ஆசிரியர்கள்' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.


