அங்காரா/இஸ்தான்புல், மே 16 - காஸா பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள் மற்றும் தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் இரவு முழுவதும் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 46 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
தென் காஸாவின் கான் யூனிஸ் நகரிலுள்ள வீடுகள் மற்றும் தற்காலிக கூடாரங்கள் மீது அதிகாலை வேளையில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான ஒரு வீட்டின் இடிபாடுகளிலிருந்து மேலும் ஐந்து உடல்களை மருத்துவக் குழுவினர் மீட்டனர்.
வட காஸாவின் ஜபாலியா நகரில் ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அதிகாரப்பூர்வப் பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்தது.
கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் நடத்தி வரும் கோரத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 53,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.


