கோத்தா பாரு, மே 16 - குவா மூசாங், ஃபெல்டா சிக்கு 3 இல் நேற்று நிகழ்ந்த கார் மற்றும் லோரி சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் பெண்மணி ஒருவர் உயிரிழந்ததோடு அவரது 9 மற்றும் 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள் காயமடைந்தனர்.
ரோஹயா ஜாஃபர் (வயது 42) என்ற அந்த மாது பிற்பகல் 1.30 மணியளவில் தனது பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு அதிகாரி முகமது ரசானி மாமாட் கூறினார்.
காரின் இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். எனினும் அவர் இறந்துவிட்டதை பிற்பகல் 2.31 மணிக்கு அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் உறுதி செய்தனர் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தார்.
விபத்து பகுதி முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக தீயணைப்பு வீரர்கள் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டதாகவும் பிற்பகல் 3.13 மணிக்கு நடவடிக்கை நிறைவடைந்ததாகவும் அவர் கூறினார்.


