ஷா ஆலம், மே 16 - உயர் வருமானம் தரக்கூடிய வேலை வாய்ப்புகளை
வழங்குவதற்கு ஏதுவாக எதிர்காலத்தில் ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர்
திட்டத்தில் பன்னாட்டு தரத்திலான நிறுவனங்கள் உள்பட பெரிய
அளவிலான நிறுவனத்துறையினர் பங்கேற்பதற்குரிய வாய்ப்பு உள்ளது.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் அத்தகைய நிறுவனங்களின்
பங்கேற்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் பேச்சு
நடத்தப்பட்டு வருவதாக மனித வளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பராய்டு கூறினார்.
அடுத்து வரும் வேலை வாய்ப்புச் சந்தைகளில் அந்நிறுவனங்கள்
பங்கேற்பதற்கு ஏதுவாக தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு
வருகிறோம்.
கடந்தாண்டு பெருநிறுவனங்களின் பங்கேற்பின் வாயிலாக சுமார் 3,000
பேருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தர நாங்கள் உதவினோம். உயர்
வருமானம் தரக்கூடிய வேலை வாய்ப்புகளின் வாயிலாக
வேலையில்லாப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டியது
என்று அவர் தெரிவித்தார்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாநில
அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய
போது அவர் இவ்வாறு சொன்னார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய இந்த ஜெலாஜா
ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புத் திட்டம் மாநிலத்தின் ஒன்பது
மாநிலங்களில் நடைபெறும். இத்திட்டத்தின் வாயிலாக மாற்றுத்
திறனாளிகள் மற்றும் முன்னாள் கைதிகள் உள்பட சுமார் 4,000 பேர் வேலை வாய்ப்பினை பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஜெலாஜா ஜோப்கேர் திட்டத்தில் சேவை, தயாரிப்பு, சந்தை,
சுகாதாரம், சுற்றுலா, உபசரணை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில்
வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதனிடையே, தொழில்துறையின் நடப்புத் தேவைக்கேற்ப தொழில்திறன்
பயிற்சிகளை வழங்குவதில் சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாட்டு மையம்
(எஸ்.டி.டி.சி.) முக்கியப் பங்கினை ஆற்றுவதாகப் பாப்பாராய்டு கூறினார்.
வாகனப் பழுதுபார்ப்பு, மின்சாரம், வெல்டிங், தகவல் தொழிலநுட்பம்,
உள்ளிட்டத் துறைகளில் இந்த மையம் பயிற்சிகளை வழங்குகிறது என்றார்
அவர்.


