புக்கிட் மெர்தாஜம், மே 16 - இல்லாத இணைய முதலீட்டுத் திட்டத்தில் பங்கு கொண்ட தனியார் நிறுவனத்தின் குமாஸ்தா ஒருவர் 465,200 வெள்ளியை இழந்தார்.
முகநூலில் வந்த விளம்பரத்தினால் கவரப்பட்ட 47 வயதான அந்தப் பெண் பின்னர் புலனம் மூலம் ஒரு பெண்ணுடன் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.
குறுகிய காலத்தில் 60 விழுக்காடு வரை லாபம் ஈட்ட உதவும் அந்த முதலீட்டுத் திட்டத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பெண் குமாஸ்தா ஆரம்பத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அறிவுறுத்தலின்படி அந்தப் பெண் மூன்று வங்கிக் கணக்குகளுக்கு 14 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை செலுத்தியுள்ளார் என்று அவர் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி லாபத்தை திரும்பப் பெற முடியாத நிலையில் முதலீட்டுத் தொகையை அதிகரிக்கும்படி பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அம்மாது உணர்ந்ததாக ஹம்சா கூறினார்.
பாதிக்கப்பட்ட அம்மாது நேற்று முன்தினம் செபராங் பிறை தெங்கா மாவட்ட காவல் தலைமையகத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மோசடி புகார் தொடர்பில் குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்றார் அவர்.


