ஜோர்ஜ் டவுன், மே 15 - பினாங்கில் ஆயுதமேந்திய கொள்ளை, வீடு புகுந்து திருடுவது மற்றும் சலவைக்கடை திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவன் இன்று இங்குள்ள ஜாலான் லிண்டாங் புக்கிட் ஜம்புல், பாயான் லெபாஸில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானான்.
குற்றத் தடுப்பு ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டு வந்த மாநில குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவல்துறையினர் இன்று அதிகாலை 4.05 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் பி.எம்.டபள்யூ. ரகக் காரை கண்டதாக பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.
போலீஸ்காரர்கள் அந்த காரை அணுகி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். காரை ஓட்டி வந்த நபர் திடீரென்று காரிலிருந்து இறங்கி போலீஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். போலீசார் உடனடியாக தற்காப்புக்காகப் பல முறை துப்பாக்கிச் வேட்டு கிளப்பினர்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்டச் சோதனையின் போது 35 வயதான உள்ளூர்வாசி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது கண்டறியப்பட்டது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த நபரின் காரை சோதனை செய்த போது அதில் FNP-45 வகை கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள், ஒரு இரும்பு கம்பி, இரண்டு மரக் கட்டைகள், இரண்டு கத்திகள், 22.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ஒரு சிக்னல் ஜாமர் மற்றும் வீடுகளை உடைப்பதற்கான பல்வேறு கருவிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தொடர் விசாரணையில் சந்தேக நபருக்கு குற்றச் செயல்கள் தொடர்பான 19 முந்தைய பதிவுகளும், போதைப்பொருள் தொடர்பான 15 பதிவுகளும் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், அவரது உடல் மேல் நடவடிக்கைகளுக்காக பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது என்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பினாங்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போலீசார், சந்தேக நபருடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஏழு உள்ளூர் ஆடவர்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்ததாக அவர் கூறினார்.
அவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுடையவர்களாவர். அவர்களைக் கைது செய்ததன் மூலம் பினாங்கு வட்டாரத்தில் நிகழ்ந்த கொள்ளை, வீடு புகுந்து திருடுவது மற்றும் சுய சேவை சலவை நிலையக் கொள்ளை உள்ளிட்ட 25 வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த கொள்ளைச் சம்பவங்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு 500,000 வெள்ளி என மதிப்பிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


