ஷா ஆலம், மே 15 - எதிர்வரும் 16வது பொதுத் தேர்தலில் கெஅடிலான் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டுச் செல்வதற்கான தனது கடப்பாட்டை கட்சி உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் வெளிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் அடித்தளத்தையும் தோற்றத்தையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் சில உத்திகளையைம் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
கெஅடிலான் கட்சியின் 2025-2028 தவணைக்கான துணைத் தலைவர் வேட்பாளர் என்ற முறையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்குள் உள்ள உறுப்புக் கட்சிகளிடையே உறவுகளை வலுப்படுத்துதுவது, வாக்காளர் நம்பிக்கையை மீட்டெடுப்பது, மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு ஆக்கத்திறனளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நூருல் இஸ்ஸா வலியுறுத்தினார்.
தலைமை தாங்கும் வாய்ப்பை எனக்கு கொடுங்கள். இனம், மதம் அல்லது பிரிவுகளைப் பொருட்படுத்தாமல் நம்மிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்துக் கொள்வதை நான் உறுதி செய்வேன். அகங்காரம், விரக்தி மற்றும் வெறுப்புகளுக்கு அப்பால் நம்மால் உயர முடிந்தால் அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமல்ல 100 ஆண்டுகளுக்கு நாம் செழித்து வளர முடியும் என்பதை அது தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர் இந்தக் கருத்துக்களை வழங்கினார்.
கட்சியில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சரும் பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவருமான டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நூருல் இஸ்ஸா, இந்த முறை தனது பிரச்சாரம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் மற்றும் அவை மக்களை சென்றடைவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களை சென்றடைவதிலும் அரசியல் பிரிவினையைக் குறைப்பதிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் நூருள் தெரிவித்தார்.
விவாதங்கள் போன்ற பிரச்சினைகளில் நாம் சிக்கிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இது அரசியல் செய்வது பற்றியது அல்ல. நமது பிரிவுகளுடன் கலந்துரையாடுவது பற்றியது என்று அவர் கூறினார்.
கெஅடிலான் கட்சி, ஒற்றுமை அரசாங்கம் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான கருத்துக்கள், உத்திகள் மற்றும் தொலைநோக்கு பார்வையை முன்வைக்க துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடையே பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் பிரசாந்த் குமார் பிரகாசம் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.


