கோலாலம்பூர், மே 15 - மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து மாஸ்கோவிற்கான பயணத்தின் போது போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தாம் விவாதித்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் கண்டறியப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனியப் படைகளுக்கும் இடையிலான சண்டையின் போது கிழக்கு உக்ரைனில் எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்பதை ஐ.நா. விமானப் போக்குவரத்து மன்றம் உறுதிப்படுத்தியது.
298 பயணிகள் மற்றும் பணியாளர்களைப் பலி கொண்ட அந்த விபத்து குறித்த அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கண்டுபிடிப்பை மாஸ்கோ நிராகரித்தது. இந்த தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது என்றும் அது கூறியது.
இந்த பேரழிவுக்கு பொறுப்பேற்கச் செய்வதற்கு தொடர்ந்து வலியுறுத்துவேன் என்று அன்வார் நேற்று புதன்கிழமை ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இந்த துயரத்தின் சுமையைத் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நியாயமான தீர்வை உறுதி செய்வதில் மலேசியா உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.
இச்சந்திப்பின்போது அந்த விமானப் பேரிடரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு புதின் இரங்கல் தெரிவித்ததாக அன்வார் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் 196 டச்சுக்காரர்கள், 43 மலேசியர்கள் மற்றும் 38 ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லது குடியிருப்பாளர்களும் அடங்குவர் என்றும் அன்வார் கூறினார்.
அரசியல்மயமாக்கப்படாத முழுமையான மற்றும் விரிவான விசாரணைக்கு புடின் கோரிக்கை விடுத்ததாக அன்வார் சொன்னார்.
இது அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்று நான் குறிப்பிட்டேன். அதற்கு அவர் (புதின்) ஆரம்பத்தில் இருந்தே விசாரணை சுயேச்சையானதாகவும் முழுமையாகவும் இருக்க வேண்டும் என்று தாம் கோரி வந்ததாக அவர் பதிலளித்தார்.
அந்த அறிக்கை மிகவும் நம்பகமானதாக அல்லது அதிகாரப்பூர்வமாக இருப்பதை உறுதி செய்வதற்கு ரஷ்யா தனது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக புதின் தன்னிடம் கூறியதாக அன்வார் மேலும் கூறினார்.


